கேரளா செல்லும் ஆம்னி பஸ்கள் இரண்டாவது நாளாக நிறுத்தம்
கேரளா செல்லும் ஆம்னி பஸ்கள் இரண்டாவது நாளாக நிறுத்தம்
ADDED : நவ 09, 2025 02:23 AM
சென்னை: தமிழகம் - கேரளா இடையே, ஆம்னி பஸ்கள் சேவை நேற்று, 2வது நாளாக நிறுத்தப்பட்டது.
சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து கேரளாவுக்கு தினமும், 200க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. சபரிமலை சீசன் துவங்க உள்ளதால், கூடுதல் ஆம்னி பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை, கேரள மாநில எல்லையை அடைந்த ஆம்னி பஸ்களுக்கு, விதிகளை மீறியதாக கூறி, அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள், 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ஆம்னி பஸ் போக்குவரத்தை, நேற்று முன்தினம் மாலையில் இருந்து திடீரென நிறுத்தி உள்ளனர். இரண்டாவது நாளாக நேற்றும் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டதால், முன்பதிவு செய்து காத்திருந்த பயணியர் அவதிப்பட்டனர்.
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கு, 'நேஷனல் பர்மிட்' இருந்தும் அபராதம் வசூலிக்கின்றனர். இப்பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு, தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

