அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு 'ஜாக்பாட்' தனி விமானத்தில் டில்லி செல்ல ஏற்பாடு
அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு 'ஜாக்பாட்' தனி விமானத்தில் டில்லி செல்ல ஏற்பாடு
ADDED : பிப் 13, 2025 07:51 PM
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் ஏற்பாட்டின்படி, கட்சி நிர்வாகிகள் 60 பேர், டில்லிக்கு பயணம் செய்கின்றனர்.
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., செயலராக முன்னாள் அமைச்சர் சண்முகம் உள்ளார். ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பதவி வகிக்கும் இவர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும். டில்லிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலர்கள், நகர செயலர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட 60 பேர், அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் டில்லி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இவர்கள் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டில்லி செல்வதற்கான டிக்கெட், அங்கு தங்குவதற்கான இடவசதி முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு 3 தினங்கள் தங்கி, டில்லியில் உள்ள கட்சி அலுவலகம், ஆக்ரா தாஜ்மஹால், பார்லிமென்ட் வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர்.
ராஜ்யசபா எம்.பி.,யாக சண்முகம் பதவி ஏற்றதும், கட்சி நிர்வாகிகளை டில்லி அழைத்துச் செல்வதாக கூறியிருந்தார். அதன்படி, தற்போது டில்லி பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.
அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, செங்கோட்டையன் ஆகியோருக்கு, கட்சி தலைமை உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. மேலும், அந்தந்த மாவட்டங்களில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் தங்களது ஆதரவாளர்களை அணி திரட்டி வருவதாக தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்களை, டில்லிக்கு அழைத்துச் செல்ல இருப்பது, கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-நமது நிருபர்-