ADDED : பிப் 08, 2024 01:24 AM
சென்னை:மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட, 'ஹிஜாவு' நிறுவன நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னையில் தலைமை அலுவலகத்துடன் இயங்கியது ஹிஜாவு நிறுவனம். அதிக வட்டி தருவதாக, பொது மக்களிடம் 4,620 கோடி ரூபாய் முதலீடு பெற்று, மோசடி செய்ததாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட 18 பேரை கைது செய்தனர்; 13 பேர் தலைமறைவாக உள்ளனர்.
ஜாமின் கோரி, நிறுவன நிர்வாகிகள் கோவிந்தராஜ், சுஜாதா, துரைராஜ் ஆகியோர், மனுக்கள் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள், நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், விசாரணைக்கு வந்தன.
ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், பாதிக்கப் பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.செல்வம் வாதாடினர்.
மூவரது ஜாமின் மனுக்களையும், நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

