டாக்டர் சுப்பையா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு பிடிவாரன்ட்
டாக்டர் சுப்பையா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு பிடிவாரன்ட்
ADDED : டிச 19, 2024 02:05 AM
புதுடில்லி:டாக்டர் சுப்பையா கொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஒன்பது பேருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013ல் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சொத்து தகராறில், நரம்பியல் மருத்துவரான சுப்பையா, கூலிப்படையினரால் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், மருத்துவர் சுப்பையாவின் உறவினரான பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரிஸ், பேசிலின் மற்றும் நண்பர்களான வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், அய்யப்பன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அய்யப்பன் அப்ரூவர் ஆனார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட பொன்னுசாமி, பேசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு துாக்கு தண்டனையும்; மேரி புஷ்பம், ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தது.
குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவர்களை விடுவித்தது.
இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி பிலா எம் திரிவேதி தலைமையிலான அமர்வில் விசாரணை நடக்கிறது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'பட்ட பகலில் மிகப் படுபயங்கரமாக நடந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் சென்னை உயர் நீதிமன்றம் எவ்வாறு விடுவித்தது' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ''எதிர்மனுதாரர்கள் தரப்பில் எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. அவர்கள் வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்க நினைக்கின்றனர்,'' என்றார். அவரது அந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 'நாங்களும் அவ்வாறே நினைக்கிறோம்' என்றனர்.
இதையடுத்து, கீழமை நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிபதிகள், அடுத்த மாதம் 20ம் தேதி அனைவரையும் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றம் இதுபோன்ற பிடிவாரன்ட் பிறப்பிப்பது அரிதான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.