அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் அறிக்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம்
அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் அறிக்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம்
ADDED : ஜன 03, 2024 12:22 AM
சென்னை:துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் அளித்த அறிக்கை மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
அந்தக் கமிஷன், 2022 மே 18ல் அளித்த அறிக்கையின் மீது, முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த, 13 பேரின் குடும்பத்தினருக்கு, ஏற்கனவே வழங்கிய நிதியுடன், கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தரப்பட்டுள்ளது.
வழக்குகள் வாபஸ்
போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 93 பேருக்கு, தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது. போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்ட வழக்குகளை தவிர, 38 வழக்குகள் திரும்ப பெறப்பட்டு உள்ளன.
போராட்டத்தில் பங்கேற்ற பரத்வாஜ் என்பவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்ததால், அவரது தாயாருக்கு, 5 லட்சம் ரூபாய், நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது.
கமிஷன் பரிந்துரை அடிப்படையில், 17 போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சைலேஷ்குமார் யாதவ், கபில் குமார் சி.சரத்கர் ஆகிய இரு ஐ.பி.எஸ்., அதிகாரிகள்; மகேந்திரன், லிங்க திருமாறன் ஆகிய இரு எஸ்.பி.,க்கள்; இரு ஆய்வாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஒரு காவல் ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பணியிடை நீக்கம்
பெருந்தண்டனை குற்றப்பிரிவின் கீழ், ஒரு உதவி ஆய்வாளர், இரண்டு இரண்டாம் நிலை காவலர்கள், ஒரு முதல் நிலை காவலர் மற்றும் ஒரு காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மூன்று முதல் நிலை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் இறுதி அறிக்கை பரிந்துரைப்படி, அப்போதைய துாத்துக்குடி கலெக்டர் மற்றும் மூன்று வருவாய்துறை அலுவலர்கள் மீதும், துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.