மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடு மாதிரி கண்காட்சி; நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடு மாதிரி கண்காட்சி; நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி
ADDED : ஜூன் 15, 2025 12:30 AM

மதுரை : மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் அமைக்கப்படும் அறுபடை வீடுகளின் மாதிரி கண்காட்சியை நாளை (ஜூன் 16) முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடலில் ஜூன் 22ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறஉள்ளது. முருகனின் அறுபடை வீடுகளை குறிக்கும் மாதிரி வடிவங்கள் மாநாட்டு வளாகத்தில் தற்காலிகமாக நிறுவப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ் கூறியதாவது:
முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணி 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது.அறுபடை வீடுகளின் மாதிரி கண்காட்சி அமைக்கும் பணி ஜூன் 15(இன்று) இரவுக்குள் முடிக்கப்படும்.இதற்கான பூஜை ஜூன் 16 காலை 9:00 மணிக்கு தொடங்கும். இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். அதன் தொடர்ச்சியாக ஜூன் 22 வரை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை பொதுமக்கள் பார்வையிட இலவசமாக அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மாநாட்டு பணிகளை காரைக்குடி முன்னாள் எம்.எல்.ஏ., சோழன் பழனிசாமி, மதுரை மாவட்ட பா.ஜ., பொறுப்பாளர்கள் பார்வையிட்டனர்.