ADDED : டிச 01, 2024 11:56 PM

சென்னை: 'விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; தேசிய பேரிடர் மீட்புப்படை உதவியை கேட்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திண்டிவனம் நகரில் கிடங்கல் ஏரி உடைந்து, ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது; நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. வீடூர் அணையில் இருந்து வினாடிக்கு 36,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால், அப்பகுதியிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடலுார் மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது; பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்கள் வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில், மீட்புப் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை உடனே வழங்க வேண்டும்; பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு, உரிய இழப்பீடு தர வேண்டும்.
புதுச்சேரி முழுதும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. மாநில அரசின் சார்பில் உணவு வழங்குவதை தவிர, ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய பேரிடர் மீட்புப்படை உதவியை கோர வேண்டும். காற்றில் விழுந்த தென்னை மரங்களுக்கும், பிற பயிர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க, தமிழக, புதுச்சேரி அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.