சமுதாய ரீதியான கோரிக்கைகள் அரசு தரப்பில் விபரம் கேட்பு
சமுதாய ரீதியான கோரிக்கைகள் அரசு தரப்பில் விபரம் கேட்பு
ADDED : அக் 08, 2024 01:37 AM
சென்னை: தமிழக அரசு சார்பில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கமிஷனர், சமுதாயத் தலைவர்களை அழைத்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறார்.
சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., தயாராகி வருகிறது. கட்சி ரீதியாக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு, தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அரசு தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பா.ம.க., வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதேபோல் பல்வேறு சமுதாய சங்கங்கள், தாங்கள் சார்ந்துள்ள சமுதாயத்திற்கு, பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இவற்றை அறிந்து அனைத்து சமுதாய மக்களையும் திருப்திபடுத்த, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கமிஷனர் சம்பத், சமுதாயச் தலைவர்களை அழைத்து பேசி வருகிறார். கடந்த வாரம் சலவைத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து பேசினார்.
நேற்று குலாலர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து பேசினார். அவர்களிடம் சமூகம், பொருளாதாரம், கல்வி தொடர்பாக உங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கூறி, அவற்றை கேட்டறிந்தார். அத்துடன் மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத் தலைவரும் மனு அளித்துள்ளார்.
