PUBLISHED ON : பிப் 15, 2026 05:02 AM

'தினமலர்', தனது 75ம் ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில், அதன் நீண்ட கால வாசகனான எனக்கு மகிழ்ச்சியும் நிறைவும் பெருகுகிறது.
எனது ஒவ்வொரு நாளும், அதிகாலையில், தினமலர் நாளிதழை படிக்காமல் துவங்குவதில்லை. அதுவும் 'தொழில்' மற்றும் 'லாபம்' பக்கங்கள் அற்புதமானவை. ஓர் எளிய வாசகனுக்கும் நிதி சார்ந்த அறிவை சுலபமாக புகட்டுவதில் இந்த பக்கங்களுக்கு இணையே இல்லை. தேசிய, சர்வதேச பொருளாதாரம் மற்றும் நிதி சர்ந்த செய்திகளை நம் தாய்மொழி தமிழில் படிக்கும் போது கிடைக்கும் நெருக்கமே அலாதியனாது. அவை, ஏதோ நாம் புரிந்து கொள்ள, நமக்கெனவே எழுதப்பட்டது போன்று இருப்பது தான் அதன் சிறப்பு.
குறிப்பாக, பங்குச் சந்தை நிலவரம் மிக விரிவாக வழங்கப்படுகிறது. இவற்றையெல்லாம் இத்தனை ஆண்டுகளாக கற்றுக் கொள்ளாமல் போனோமே என்ற ஆதங்கம் தான் எனக்குள் ஏற்படுகிறது.
'ஆயிரம் சந்தேகங்கள்' என்ற பகுதியின் ரசிகன் நான். சாதாரண மக்களும் எப்படியெல்லாம் திட்டமிட்டு பணம் சேர்த்தால் அதை முறையாக முதலீடு செய்தால் கோடீஸ்வரன் ஆகலாம் என்று இந்த பகுதி பேசும்போது, எனக்கு ஆச்சரியமே ஏற்படும். என் நிறுவனத்தில் இருக்கும் பணியாளர்களுக்கு எல்லாம் சேமிப்பை பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் நான் தெரிவித்து வருகிறேன். ஆனால், அது எவ்வளவு அதிகமாக பல்கிப்பெருகும் என்பதற்கான உண்மையான கணக்கீடுகளையும் வாய்ப்புகளையும் ஆயிரம் சந்தேகங்கள் பகுதியில் வரும் தகவல்கள் வாயிலாக தான் தெரிந்து கொண்டேன்.
இன்னும் முன்னதாகவே, என் சிறு வயதிலேயே இத்தகைய தகவல்கள் தெரிந்திருக்குமானால், நான் மேலும் என்னை வளப்படுத்திக் கொண்டு இருப்பேனே என்று நினைத்துக் கொள்வேன்.
சிறு தொழில்கள், பெருந்தொழில்கள் என அனைத்து வகையான தொழில்களுக்கும் உதவும் வகையில், அரசின் கொள்கை முடிவுகளையும் அது சார்ந்த திட்டங்களையும் இனிய தமிழில் படிப்பது சுகமாக இருக்கிறது. பல நிபுணர்களின் கொள்கை சார்ந்த விளக்கங்களை வாசிக்கும் போது, புதிய பார்வையும் கோணமும் கிடைக்கிறது.
தமிழகத்தின் தொழில் வளம் பெருக வேண்டும், அதன் வாயிலாக நிறுவனங்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும், தனி நபர்களுடைய நிதி தேவைகள் பூர்த்தியாக வேண்டும், அவர்கள் வாழ்க்கையில் சுபிட்சம் பொங்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் தினமலர் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.
'அறிவோம் ஆன்மிகம்' மற்றும் 'குறுக்கெழுத்து போட்டி' எனக்கு பிடித்த இன்னும் சில பகுதிகள். குறிப்பாக, குறுக்கெழுத்து போட்டி ஞாபக சக்தியை வளர்க்கும் பகுதி. மூளையை சுறுசுறுப்புடன் வைத்திருக்கவும், நாட்டு நடப்புகளை ஞாபகமாக வைத்துக் கொள்ளவும் இந்த பகுதி உதவுகிறது.
பெரிதினும் பெரிது கேள் என்றார் பாட்டுக்கொரு புலவன் பாரதி. தினமலர் அதற்கு உதாரணமாக திகழ்கிறது.
எம்.முரளி
இயக்குனர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அண்டு புட் ப்ராடக்ட்ஸ் (சென்னை) பி., லிட்.,

