ADDED : ஜூலை 06, 2025 06:17 AM
உயிருடன் இருப்பவர்களும் கல்லீரல் தானம் செய்யலாம் என்கின்றனர். இது எப்படி சாத்தியமாகும்.
- -கவிதா, மதுரை
கல்லீரல் தானத்தில் இரண்டு வகை உண்டு. உயிருடன் இருப்பவரும் தானம் செய்யலாம், இறக்கும் தருவாயில் உள்ளவர்களும் தானம் செய்யலாம். ஒரு கல்லீரல் தான் இருக்கிறது என்பதால் உயிருடன் இருப்பவர் தானம் செய்வது சாத்தியமா என யோசிக்க வேண்டாம். நமது உடலில் கல்லீரலின் எடை 1500 கிராம் முதல் 1800 கிராம் வரை இருக்கும். உடல் எடை, உயரத்திற்கு ஏற்றவாறு 30 முதல் 50 சதவீத அளவு கல்லீரலே நமக்கு போதுமானது. மீதி பகுதியை மற்றவர்களுக்கு தானம் செய்யலாம்.
தானம் பெறுபவர் 30 முதல் 40 சதவீதம் வரை தானம் பெறுவர். ஆரோக்கியமான 55 வயதிற்குட்பட்ட ஒருவர், கல்லீரலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தானம் செய்தால் 6 மாதங்களில் தானமாக கொடுத்தவருக்கும் அதை பெற்றவருக்கும் மீதி கல்லீரல் வளர்ந்து விடும். மூளைச்சாவு அடையும் நோயாளிகளிடம் இருந்து கல்லீரல் முழுமையாக எடுக்கப்பட்டு தேவைப்படும் நோயாளிக்கு பொருத்தப்படும்.
- டாக்டர் பி. ராஜேஷ்பிரபுவயிறு, இரைப்பை, கல்லீரல் நோய் சிறப்பு நிபுணர், மதுரை
6 மாதங்களுக்கு முன் ஆஞ்சியோ சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்கு பின் மருத்துவர் அறிவுரைப்படி தொடர் மருந்து, மாத்திரைகள் எடுத்துவருகிறேன். தற்போது எனக்கு அடிவயிற்றில் அடிக்கடி வலி ஏற்படுகிறது. மருந்துக்கடைகளில் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறேன். இதை உட்கொள்வது சரிதானா. இதற்கும் இதய நோய்க்கும் தொடர்பு உள்ளதா.
- பச்சையப்பன், திண்டுக்கல்
ஆஞ்சியோ செய்யப்பட்டதற்கும் வயிற்று வலிக்கும் சம்பந்தம் இல்லை. மாத்திரைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லை. வயிற்றில் வலி ஏற்படுவது சாதாரண நிகழ்வாக இருக்கலாம். இதய நோய்க்கு எடுத்துக்கொள்ளும் தொடர் மாத்திரைகளில் குறிப்பிட்ட ஆன்டிபயாட்டிக் மாத்திரையால் கூட வயிறு வலிக்கலாம். சிலருக்கு கல்லீரல், ஈரல் வீக்கம், கிட்னி, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும் கூட இந்த அறிகுறிகள் இருக்கும். எந்த காரணத்துக்காக வலி ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது. மெடிக்கல்லில் கிடைக்கும் வலி நிவாரணி மாத்திரைகள் மட்டுமே முழு தீர்வையும் தராது. தகுந்த பரிசோதனைக்கு பின்பு தொடர் சிகிச்சையாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளில் சிலவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி மாற்றம் செய்யலாம். இதில் தீர்வு இல்லையென்றால் சிறுநீரகத்தில் கல் இருக்கிறதா என பார்த்து சிகிச்சை எடுக்கலாம்.
- டாக்டர் வீரமணிஇதயவியல் சிகிச்சை நிபுணர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைதிண்டுக்கல்
4 மாதம் முடிந்த கர்ப்பிணி அடிக்கடி நீண்ட துார பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பயணம் மேற்கொள்ளலாமா. உடல், மன நலனுக்கு தேவையான ஆலோசனை தாருங்கள்.
- ஆர்.ஜெயசித்ரா, ஆண்டிபட்டி
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பொதுவான கேள்வி இது. கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்கள் மற்றும் கடைசி மூன்று மாதங்கள் நீண்ட துார பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். 13 வாரம் முதல் 28 வது வாரம் வரை உங்களுடைய கர்ப்பத்தில் எவ்வித சிக்கலும் இல்லையெனில் மருத்துவரின் ஆலோசனைக்கு பின் பயணம் மேற்கொள்ளலாம்.
பயணத்தின் போது குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இளநீர், மோர், பழங்கள், சரியான அளவு நீர் அருந்த வேண்டும். இதமான பாடல்களை கேட்டு உங்கள் மன அமைதியையும் பாதுகாக்கலாம். 'கர்ப்ப காலம் என்பது நோயல்ல, உங்கள் கர்ப்ப காலத்தினை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்'
டாக்டர் எம்.பி. லிசா, குழந்தைகள் நல மருத்துவர், ஆண்டிபட்டி.
எனக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது. இதற்கான தீர்வு என்ன.
-- ப.கஸ்துாரி, ராமநாதபுரம்
பொதுவாக மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் மூச்சு திணறல் ஏற்படும். துாசி, புகை, பூக்களின் மகரந்தம், ஒவ்வாமை, கோடை காலத்தில் காற்றில் ஈரப்பதம் இல்லாததாலும் காற்று மாசு அதிகரித்து அதனை சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படும். இது போன்ற நேரங்களில் புகைகளில் பணிபுரிவதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிந்து கொண்டால் பாதுகாப்பாக இருக்கும்.
மூச்சு திணறல் ஏற்படும் போது நுரையீரல் சிறப்பு டாக்டரை சந்தித்து ஆலோசனை செய்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியாக கவனிக்காவிட்டால் ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவார்கள். மூச்சு திணறல் காரணமாக இதய பாதிப்பும் ஏற்படும்.
ஆஸ்துமா பரம்பரையாக பாதிக்கப்படவர்களுக்கும் வரும். வைரஸ் காய்ச்சலால், சிறு குழந்தைகளுக்கு குளிர் பானங்கள், ஐஸ் போன்றவைகளை உட்கொள்வதால் இந்த பாதிப்பு ஏற்படும்.
இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள புரத சத்து நிறைந்த உணவுகளான முட்டை, சுண்டல், பயறு வகைகளை உண்ணலாம்.
-டாக்டர் கே.வெங்கடேஸ்வரன் நுரையீரல் சிறப்பு நிபுணர்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
பல்லில் சீழ் பிடிப்பதை எவ்வாறு சரி செய்வது.
- அ.தாமோதரன், சிவகங்கை
சீழ்பிடித்த பல் என்பது பாதிக்கப்பட்ட பல்லாகும். இந்த தொற்று பல் சிதைவு, ஈறு நோய் அல்லது விரிசல் பல் ஆகியவற்றால் ஏற்படலாம். இந்தப் பிரச்னை பல்லின் அடிப்பகுதியில் பாக்டீரியாவை ஏற்படுத்தி, கூழ் சேதமடைந்து, பல்லின் அடிப்பகுதி வேரின் நுனியில் சீழ் படிவதற்கு வழிவகுக்கிறது.
தாடை எலும்பில் சீழ் படிதல் சீழ்ப்பிடிப்பு என்று அழைக்கப்படுகிறது, சிகிச்சையளிக்கப்படாவிட்டால், சீழ்பிடித்த பற்கள், ஈறுகள் மற்றும் தாடையில் கடுமையான தொற்றுக்கு வழிவகுக்கும்.
பாதிக்கப்பட்ட பல்லைச் சுற்றி வலி மற்றும் வீக்கம், ஈறு சிவத்தல் மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுதல் ஆகியவை சீழ்பிடித்த பல்லின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சீழ்பிடித்த பல்லுக்கு வேர் கால்வாய் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது .
- டாக்டர் விஜயபாரத்பல் மருத்துவர்அரசு மருத்துவமனை காளையார்கோவில்
டாக்டர் எனக்கு சர்க்கரை நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு முற்றிலும் குணமாகிவிட்டது. இருப்பினும் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சிஎடுக்க வேண்டுமா; மீண்டும் அந்நோய் வர வாய்ப்புள்ளதா
- -கனகராஜ், அருப்புக்கோட்டை
சர்க்கரை வியாதி வந்து, குணமான பின்பு மீண்டும் வராது என்பதை நிச்சயமாக கூற முடியாது. நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள், உடற்பயிற்சிகளை வைத்து தான் உள்ளது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்து மாத்திரைகள் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்று. துவக்க நிலையிலேயே வந்து நாம் குணமடைந்து விட்டோமே என்று அலட்சியப்படுத்த கூடாது.
6 மாதத்திற்கு ஒரு முறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் கண்டறிய பட்டு 5 முதல் 10 ஆண்டுகள் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் செய்து கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் 10 ஆண்டுகளுக்கு பிறகு, பின் விளைவுகள் உடலை பாதிக்கக்கூடிய அளவில் பெரியதாக இருக்கும்.
- டாக்டர் ஜெய்சங்கர்சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்அருப்புக்கோட்டை