ADDED : ஜன 09, 2025 06:26 AM
சென்னை:   தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதிக காலி பணியிடங்களால் ஒரு ஊழியரே, இரண்டு - மூன்று கடைகளை கூடுதலாக கவனிக்க வேண்டி உள்ளது.
எனவே, ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபடுவோருக்கு கார்டுக்கு, 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கார்டுக்கு, 50 காசு ஊக்கத்தொகை வழங்க, அதிகாரிகளுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபடுவோருக்கு, ஒரு கார்டுக்கு 50 காசு வீதம் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுரை வழங்கி, அத்தொகை ரேஷன் ஊழியர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.

