ADDED : ஜன 11, 2024 02:00 AM
திருநெல்வேலி:போலீஸ் ஸ்டேஷன்களுக்கு விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கு ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் உட்பட ௧௩ பேர் நெல்லை கோர்ட்டில் ஆஜராகினர்.
அம்பை பகுதி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு விசாரணைக்கு வந்த சிலரின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக அப்போதைய ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி, ௪ வழக்குகளை பதிவு செய்தனர்.
ஏ.எஸ்.பி., பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, எஸ்.ஐ.,க்கள் முருகேசன் உட்பட ௧௪ பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை நேற்று நெல்லை ஜே.எம்.௧ கோர்ட்டில் மாஜிஸ்திரேட் திரிவேணி முன்னிலையில் நேற்று நடந்தது.
ஏ.எஸ்.பி., பல்வீர்சிங், இதர போலீசார் என ௧௩ பேர் கோர்ட்டில் ஆஜராகினர். இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி ஆஜராகவில்லை.
இந்த வழக்குகள் மனித உரிமை மீறல் தொடர்பானவை என்பதால் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் தரப்பு வக்கீல் மகாராஜன் வாதிட்டார்.
இதுகுறித்து மனுதாக்கல் செய்யும்படி மாஜிஸ்திரேட் தெரிவித்தார். வழக்கு விசாரணை வரும் ௩௧ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

