எலி மருந்து நெடியால் சென்னையில் இரு குழந்தைகள் உயிரிழப்பு
எலி மருந்து நெடியால் சென்னையில் இரு குழந்தைகள் உயிரிழப்பு
UPDATED : நவ 14, 2024 10:23 PM
ADDED : நவ 14, 2024 05:19 PM

சென்னை: வீட்டில் வைக்கப்பட்ட எலி மருந்தில் இருந்து வந்த நெடியால், இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பெற்றோர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை குன்றத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் கிரிதரன் பவித்ரா தம்பதி வசித்து வருகின்றனர். இத்தம்பதிக்கு வைஷ்ணவி(6), சாய் சுதர்சன்(1) இரு குழந்தைகள் உள்ளனர். வீட்டில் எலித் தொல்லை இருந்துள்ளது. இதனை சமாளிக்க முடியாத நிலையில், 'பெஸ்ட் கன்ட்ரோல்' நிறுவனத்தை நாடி உள்ளனர். அவர்கள், வீட்டில் எலி மருந்தை வைத்துள்ளனர்.
கிரிதரன், பவித்ரா ஆகியோர் குழந்தைகளுடன் ஏசி அறையில் தூங்கி உள்ளனர். அப்போது , அங்கிருந்த எலி மருந்து நெடி வீசி உள்ளது. அவர்கள் தூங்கிய அறையில் இருந்த ஜன்னல் மற்றும் கதவு பூட்டப்பட்டு கிடந்தது. இதனால். நெடி போகப்போக அந்த அறையில் அதிகரித்தது. இதனை சுவாசித்த 4 பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.
உடனடியாக 4 பேரும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தைகள் உயிரிழந்த நிலையில், கிரிதரன் மற்றும் பவித்ரா ஆகியோர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இது தொடர்பாக வீட்டிற்கு எலி மருந்தை அடித்த நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எலி மருந்தை அடித்த ஊழியர் தினகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கவனக்குறைவாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதியப்பட்டு உள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆய்வுஇதனிடையே, எலி மருந்து வைக்கப்பட்ட இடத்தை தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். முகக்கவசம் அணிந்து ஆய்வில் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அதில் அளவுக்கு அதிகமாக எலி மருந்து வைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. எலி மருந்து ஏசி மூலம் பரவி மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழந்தனரா என ஆய்வு நடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.