சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு கைதான அசாம் நபர் சிறையில் அடைப்பு
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு கைதான அசாம் நபர் சிறையில் அடைப்பு
ADDED : ஜூலை 27, 2025 01:09 AM

கும்மிடிப்பூண்டி:சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அசாம் மாநிலத்தை சேர்ந்த நபரிடம், போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்ட பின், நேற்று இரவு, 'போக்சோ' நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன் ஆஜர் செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், ஜூலை 12ம் தேதி மதியம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை, மர்ம நபர் ஒருவர் துாக்கி சென்று, மாந்தோப்பில் பாலியல் வன்கொடுமை செய்தார்.
போக்சோ வழக்கு பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீசார், மர்ம நபரின் படத்தை வெளியிட்டு, தகவல் தருவோருக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்தனர். தனிப்படை மற்றும் ரோந்து போலீசார் என, நுாற்றுக்கணக்கான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை, சூலுார்பேட்டை ரயில் நிலையத்தில், அந்நபரை தனிப்படை போலீசார் அடையாளம் கண்டனர். அவரை மொபைல் போனில் படம் பிடித்து, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.,க்கு அனுப்பி வைத்தனர். படத்தை பார்த்த சிறுமியும், அந்த நபரை உறுதி செய்தார்.
அந்த நபரை கைது செய்து, கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர். நேற்று மாலை வரை, அந்த நபரை பற்றிய எந்த தகவலையும் போலீசார் வெளியிடாமல் ரகசியம் காத்தனர்.
நேற்று காலை கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், முகத்தை மறைத்தபடி அந்த நபரை, ஆந்திர மாநிலம், சூலுார்பேட்டை அழைத்து சென்றனர். அங்கு, அவர் வேலை பார்த்த 'ஹரியானா ராஜஸ்தான் ஹோட்டல்' என்ற பெயரில் இயங்கி வரும் தாபாவில் விசாரணை நடத்தினர்.
பின்னர், கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனையை முடித்து, மீண்டும் கவரைப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு மீண்டும் விசாரணையை தொடர்ந்த போலீசார், இரவு 7:00 மணியளவில், திருவள்ளூர் போக்சோ நீதிபதி முன் ஆஜர்படுத்த, பூந்தமல்லி அழைத்து சென்றனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அந்த நபர் அசாம் மாநிலம், தின்சுக்கியா மாவட்டத்தை சேர்ந்த ராஜூ பிஸ்வகர்மா, 35, என்பது தெரியவந்தது. திருமணமான சில நாட்களில் மனைவி பிரிந்து சென்றதால், தனியாக வசித்து வந்துள்ளார்.
கடந்த, 10 ஆண்டு காலமாக சூலுார்பேட்டையில் உள்ள தாபா உணவகத்தில் சப்ளையராக வேலை பார்த்து வந்துள்ளார். 'ஷிப்ட்' முறையில் வேலை செய்ததும், ஓய்வு நேரங்களில், புறநகர் மின்சார ரயிலில் சென்னை சென்ட்ரல் - சூலுார்பேட்டை இடையே பயணிப்பதையும் வழக்கமாக கொண்டவர்.
கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் என்பதும், போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்த பின், போலீஸ் காவலில் எடுத்து, மீண்டும் விசாரணை நடத்தப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.