ADDED : ஜூலை 28, 2024 03:45 PM

சென்னை: தமிழகத்தில் இன்று வெவ்வேறு இடங்களில், பாஜ., அதிமுக நிர்வாகிகள் மற்றும் காங்., கவுன்சிலரின் கணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ., பிரமுகர்
சிவகங்கை அருகே வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(53). பா.ஜ., கூட்டுறவு பிரிவு சிவகங்கை மாவட்ட செயலராக உள்ளார். செங்கல் சூளை நடத்தி வருகிறார். நேற்று டூவிலரில் இளையான்குடி சாலையில் சென்ற போது மர்ம நபர்கள் செல்வகுமாரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். சிவகங்கை தாலுகா போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்., பிரமுகர்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த பாரதபள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன். டெம்போ ஓட்டிவந்தார். இவரது மனைவி உஷா ராணி. திருவட்டார் பேரூராட்சி 10வது வார்டு காங்., கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு ஜாக்சனுக்கு மொபைல்போனில் அழைப்பு வந்துள்ளது. தேவாலயம் அருகே சென்ற ஜாக்சனிடம், டூவிலரில் வந்த 6 பேர் கும்பல் தகராறில் ஈடுபட்டு, அரிவால் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி தாக்கி உள்ளனர். ஜாக்சன் கூச்சலிட, அக்கும்பல் தப்பி ஓடியது. அப்பகுதி மக்கள் ஜாக்சனை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாக்சன் உயிரிழந்தார். திருவட்டார் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜ்குமார் என்ற விலாங்கன் இக்கொலையை செய்ததும், இருவருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் இருந்ததும் தெரியவந்துள்ளது.
அதிமுக பிரமுகர்
கடலூர் நவீநீதம் நகரை சேர்ந்தவர் பத்மநாதன். 45. அதிமுக வார்டு செயலர். இன்று காலை, புதுச்சேரி மாநில எல்லை பகுதியான திருப்பனாம்பாக்கம் என்ற இடத்தில் டூவிலரில் பயணித்த இவர் மீது மர்ம கும்பல் காரை மோதியது. அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பத்மநாதனை, காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் அரிவாலால் வெட்டி கொலை செய்தனர். முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

