சட்டசபை கூட்டம் 2 நாள் நடக்கும் சபாநாயகர் அப்பாவு தகவல்
சட்டசபை கூட்டம் 2 நாள் நடக்கும் சபாநாயகர் அப்பாவு தகவல்
ADDED : டிச 03, 2024 12:28 AM
சென்னை, ''தமிழக சட்டசபை கூட்டம், வரும் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கும்,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், நேற்று காலை 11:00 மணிக்கு, சபாநாயகர் அப்பாவு தலைமையில், அவரது அறையில் நடந்தது.
கூட்டம் முடிந்த பின், அப்பாவு அளித்த பேட்டி:
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் சட்டசபை கூட்டம் நடக்கும்.
முதல் நாள், 2024 - 25ம் ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார். அன்று அரசினர் தனி தீர்மானம், முதல்வரால் கொண்டு வரப்படும்.
மதுரை மாவட்டத்தில், டங்ஸ்டன் சுரங்க உரிமையை, மாநில அரசின் அனுமதியின்றி வழங்கியதை ரத்து செய்யக்கோரி, தீர்மானம் கொண்டு வரப்படும். இரண்டாம் நாள் விவாதம் நடந்து, பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும். இரண்டு நாட்களும் கேள்வி நேரம் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.