வரும் 24ம் தேதி வரை சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
வரும் 24ம் தேதி வரை சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
ADDED : ஜன 21, 2026 07:08 AM

சென்னை: ''சட்டசபை கூட்டம், வரும் 24ம் தேதி வரை நடக்கும்; பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும்'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சபாநாயகர் அப்பாவு தலைமையில், நேற்று சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து, அப்பாவு அளித்த பேட்டி:
இன்று சட்டசபையில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகள், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். அத்துடன் இன்றைய சபை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.
நாளை மற்றும் நாளை மறுதினம் காலை, கேள்வி நேரத்திற்கு பின், கவர்னர் உரை மீது விவாதம் நடக்கும்.
வரும் 24ம் தேதி, விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்குவார். அத்துடன், சபை நடவடிக்கைகள் நிறைவு பெறும். இந்த கூட்டத்தொடரில், பல்வேறு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.
கவர்னர் பேசும்போது, 'மைக்' துண்டிக்கப்பட்டதாகக் கூறுவது தவறான தகவல்.
நான் பேசுவதற்காக, அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவர் பேசும்போது, என்னுடைய 'மைக்' இணைப்பு துண்டிக்கப்பட்டது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட, 234 தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே, சபையில் பேச முடியும். அரசு தயாரித்து கொடுக்கும் உரையை, கவர்னர் வாசிக்க வேண்டும். அரசின் நிறை, குறைகள் குறித்து, கவர்னர் பேச முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
