ஹவாலா கும்பலிடம் பணம் பறிப்பு சிறப்பு எஸ்.ஐ.,க்களின் சொத்துக்கள் ஆய்வு
ஹவாலா கும்பலிடம் பணம் பறிப்பு சிறப்பு எஸ்.ஐ.,க்களின் சொத்துக்கள் ஆய்வு
ADDED : ஜன 17, 2025 02:41 AM
சென்னை:வருமான வரி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, கோடிக்கணக்கில் வழிப்பறி செய்ததால் கைதான சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ராஜாசிங் மற்றும் ஸன்னி லாய்டு ஆகியோர் வாங்கியுள்ள சொத்துக்கள் குறித்து, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்தாண்டு, டிசம்பர், 16ம் தேதி இரவு, திருப்பத்துாரில் இருந்து, 20 லட்சம் ரூபாயுடன் வந்த முகமது கவுஸ் என்பவரிடம் வழிப்பறி செய்தது தொடர்பாக, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., ராஜா சிங் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த, சென்னை வருமான வரி அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் பிரபு, 31, ஆய்வாளர் தாமோதரன், 41, ஊழியர் பிரதீப், 42 ஆகியோரும் கைதாகினர்.
இவர்களின் முக்கிய கூட்டாளியான, சென்னை சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., ஸன்னி லாய்டை தேடி வந்த போலீசார், இரு தினங்களுக்கு முன், உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து, ஜன., 30ம் தேதி வரை, புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.
முன்னதாக, ஸன்னி லாய்டு, ராஜா சிங் ஆகியோரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அப்போது, சென்னை பெரியமேடு, ராயபுரம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றியே பணிபுரிந்து வந்த ஸன்னி லாய்டு, ராஜா சிங் ஆகியோர், வருமான வரி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, ஹவாலா பண பரிமாற்ற கும்பலை குறிவைத்து கோடிக்கணக்கில் வழிப்பறி செய்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில், இருவரும் சென்னை மற்றும் சொந்த ஊரில் வாங்கியுள்ள சொத்துக்கள் குறித்து, திருவல்லிக்கேணி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் கூறுகையில், 'ராஜா சிங் தஞ்சாவூரிலும், ஸன்னி லாய்டு சென்னையிலும் சொத்துக்கள் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. சட்ட விரோதமாக செயல்படும் கும்பல்களிடம் இருந்து இருவருக்கும் மாதம் தலா, ஒரு லட்சம் ரூபாய் வரை மாமூல் வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது' என்றனர்.