மோசடி நிதி நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்து முடக்கம்
மோசடி நிதி நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்து முடக்கம்
ADDED : ஏப் 18, 2025 11:25 PM
சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், 'நியோ மேக்ஸ்' நிதி நிறுவனத்தின், 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு, திருச்சி, தஞ்சை, துாத்துக்குடி என, பல மாவட்டங்களில், 'நியோ மேக்ஸ் பிராப்பர்ட்டீஸ்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
அதன் இயக்குநர்களாக, திருச்சியை சேர்ந்த வீரசக்தி, கமலக்கண்ணன் உள்ளிட்டோர் செயல்பட்டனர். முதலீடுதாரர்களுக்கு, 12 - 30 சதவீதம் வட்டி தருவதாகக் கூறி, 8,000 கோடி ரூபாய் வரை பெற்று மோசடி செய்துஉள்ளனர்.
இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீரசக்தி உட்பட, 129 பேரை கைது செய்துள்ளனர். இந்த மோசடி குறித்து, 2023ல், அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தொடர் விசாரணையில், கமலக்கண்ணன் உள்ளிட்டோர், மோசடி செய்த தொகையில் மருத்துவமனைகள், ேஹாட்டல்கள், டிரான்ஸ்போர்ட் என, பல தொழில்களில் முதலீடு செய்து, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, நியோ மேக்ஸ் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களுக்கு சொந்தமான, 600 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையாச் சொத்துக்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முடக்கி உள்ளனர்.

