ரூ.1.50 லட்சம் லஞ்சம் அறநிலையத்துறை உதவி கமிஷனர் கைது
ரூ.1.50 லட்சம் லஞ்சம் அறநிலையத்துறை உதவி கமிஷனர் கைது
ADDED : ஜூலை 19, 2025 12:17 AM

கோவை:கோவையில், 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை மாவட்டம், சூலுார் அருகே பாப்பம்பட்டியில் வீராத்தியம்மன் கோவில் உள்ளது. போயர் சமூக நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோவிலில், ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருகிறது.
கோவில் நிர்வாகத்தில் பிரச்னை ஏற்பட்டதால், கோவை ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அறநிலையத்துறைக்கு விண்ணப்பித்தனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை தாமதம் செய்து வந்ததால், அதற்கான பணியை விரைவுபடுத்தக்கோரி, சென்னை ஐகோர்ட்டில், நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவரான, ரத்தினபுரியைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் சுரேஷ்குமார் மனு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஐகோர்ட், ஜூன் 16ல் பிறப்பித்த உத்தரவில், 12 வாரத்துக்குள், கோவில் நிர்வாகத்தை ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவிட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா, 54, கோவில் நிர்வாகத்தை மாற்றுவதற்காக, சுரேஷ்குமாரிடம், 1.50 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சுரேஷ்குமார் புகார் அளித்தார். நேற்று முன்தினம் இரவு, சுரேஷ்குமாரிடம் 1.50 லட்சம் ரூபாயை வாங்கிய இந்திராவை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது வழக்கு பதிந்து, கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். ஆக., 1 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் இந்திரா அடைக்கப்பட்டார்.

