சிறை காவலர்கள் போல் சலுகை; எதிர்பார்ப்பில் உதவி ஜெயிலர்கள் அரசுக்கு ரூ.பல லட்சம் வருவாய் இழப்பு தடுக்கப்படும்
சிறை காவலர்கள் போல் சலுகை; எதிர்பார்ப்பில் உதவி ஜெயிலர்கள் அரசுக்கு ரூ.பல லட்சம் வருவாய் இழப்பு தடுக்கப்படும்
ADDED : ஜூன் 07, 2025 10:55 PM
மதுரை: தமிழக சிறைகளில் இரண்டாம் நிலை காவலர்களுக்கு விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் வழங்குவது போல், கட்டாய இடமாற்றம் செய்யப்பட்ட தங்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் என உதவி ஜெயிலர்கள், தலைமை காவலர்கள் டி.ஜி.பி., மகேஸ்வர் தயாளிடம் வலியுறுத்தி உள்ளனர்.
சிறைகளில் நீண்டகாலம் பணியாற்றிய உதவி ஜெயிலர்கள், தலைமை காவலர்கள் இரண்டு மாதங்களுக்கு முன் கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டனர். 'கவுன்சிலிங் முறையில் விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் வழங்காமல் இடமாற்றப்படுவதால் மீண்டும் பழைய இடங்களில் பணியாற்ற 'சம்திங்' கொடுப்பர்.
இது ஊழலுக்கு வழிவகுக்கும்' என தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது. இதன்காரணமாக, இரண்டாம் நிலை காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களில் இடமாற்றம் செய்ய டி.ஜி.பி., உத்தரவிட்டார். இதற்காக விருப்பமனு பெறப்பட்டு வருகிறது.
அதேசமயம் 'எங்களுக்கு தண்டனை அளித்தது போல் நீண்ட துாரம் உள்ள சிறைகளுக்கு கட்டாய இடமாற்றம் செய்ததை ரத்து செய்து, விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் அளிக்க வேண்டும்' என உதவி ஜெயிலர்கள், தலைமை காவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன்மூலம் அரசுக்கு தேவையற்ற செலவு குறையும் என்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: கட்டாய இடமாற்றம் செய்யப்படும்போது, குடும்பத்துடன் செல்ல பயணப்படி அரசு தருகிறது. தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் இப்படி இடமாற்றப்பட்டுள்ளதால் அவர்கள் பதவிக்கேற்ப பயணப்படி அரசு தந்தாக வேண்டும். அதேசமயம் விருப்ப இடங்களுக்கு இடமாறி செல்லும்போது பயணப்படி சலுகை கிடையாது. கட்டாய இடமாற்றத்தால் அரசுக்கு ரூ.பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்படும். இதை தவிர்க்க கட்டாய இடமாற்றத்தை ரத்து செய்து கவுன்சிலிங் நடத்தி விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் அளித்தால் அரசிற்கு வீண் செலவு இருக்காது. இதுகுறித்து டி.ஜி.பி., பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.