'எம்.சாண்ட்' விலை உயர்வு கட்டுப்படுத்த சங்கம் வலியுறுத்தல்
'எம்.சாண்ட்' விலை உயர்வு கட்டுப்படுத்த சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜன 04, 2025 02:19 AM

சென்னை: 'கருங்கல் துகள்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் 'எம். சாண்ட்' விலை, குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இந்திய கட்டுமான வல்லுனர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் அதிக அளவில், கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு மணல் அவசியம். ஆனால், மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், கருங்கல் துகள்களை சுத்தப்படுத்தி, ஆலைகள் வாயிலாக தயாரிக்கப்படும், எம். சாண்ட் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த பிப்ரவரியில், எம்.சாண்ட் விலை உயர்த்தப்பட்டது. தற்போது, கரூர், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், எம்.சாண்ட் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. எம் சாண்ட் குவாரி உரிமையாளர்கள், தங்களுக்குள் கூட்டணி அமைத்து, விலையை உயர்த்தி வருகின்றனர்.
குவாரி நிலையில், 100 கன அடி அடங்கிய ஒரு யூனிட் எம்.சாண்ட் விலை, 2,000 ரூபாயில் இருந்து, 3,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது சில்லரை விற்பனைக்கு வரும் போது, 6,000 ரூபாய் வரை அதிகரிக்கிறது.
இதனால், நிதி ஆண்டு முடிவதற்குள் கட்டுமான வேலையை முடிக்க வேண்டிய நிறுவனங்களால், பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனி நபர்கள் வீடு கட்டுவதிலும், திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிக செலவு ஏற்படுகிறது.
கருங்கல் ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வரிடம் மனு வாயிலாக முறையிட்டு உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

