நாகை மீனவர்கள் மீது தாக்குதல்: கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
நாகை மீனவர்கள் மீது தாக்குதல்: கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
ADDED : பிப் 04, 2024 02:54 AM

நாகப்பட்டினம்: நாகை மீனவர்களை நடுக்கடலில் தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறித்துச் சென்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுதுறையை சேர்ந்தவர் ராமன்,45, அவரது மகன் ரமேஷ்,28, சிவக்குமார்,30, ஆகியோர் ஒரு பைபர் படகிலும் மற்றொரு படகில் பொன்னுத்துரை,52, ஜெயச்சந்திரன்,36, நேற்று முன்தினம் மதியம் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் அப்பகுதிக்கு ஒரு படகில் வந்த இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர், நாகை மீனவர்களின் படகில் ஏறி கழுத்தில் பட்டாக்கத்தியை வைத்து மிரட்டி, படகுகளில் இருந்த ஜி.பி.எஸ்., வாக்கி டாக்கி, செல்போன்கள் மற்றும் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்து தங்கள் படகில் ஏற்றிக் கொண்டு தப்பி சென்றனர்.
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் ராமன் என்ற மீனவருக்கு காயம் ஏற்பட்டது. பொருட்களை பறிகொடுத்த மீனவர்கள், நேற்று காலை கரை திரும்பினர்.
இச்சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.