ADDED : நவ 14, 2024 03:06 AM
சென்னை : ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், மனநல டாக்டர் நோயாளியால் தாக்கப்பட்டார்.
சென்னை ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நீலாங்கரையைச் சேர்ந்த பரத், 24, என்பவர், மனநலம் பாதிக்கப்பட்டு, 2023 செப்டம்பரில், ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்றார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று காலை மீண்டும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, அங்கு பணியில் இருந்த, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மன நல டாக்டர் ஹரிஹரன், 49, என்பவரை, முகத்தில் குத்தி, சட்டையை பிடித்து இழுத்து, கீழே தள்ளி விட்டார்; பின் அங்கிருந்து தப்பி ஓடினார்.
முகத்தில் பலத்த காயமடைந்த டாக்டருக்கு, அங்கிருந்த மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர். முகத்தில் தையல் போடப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சையில் உள்ளார்.
இது குறித்து ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜி கூறுகையில், ''தாக்கப்பட்ட டாக்டர் உடல்நிலை சீராக உள்ளது. கன்னம் மற்றும் உதடு கிழிந்ததால், தையல் போடப்பட்டுள்ளது. அவரை தாக்கியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் முறையான சிகிச்சை பெறவில்லை என்பதால், இச்சம்பவம் நடந்தது. இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக, ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி, வண்ணாரப் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிந்து, டாக்டரை தாக்கிய பரத் என்பவரை கைது செய்து, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

