த.வெ.க.,வினர் மீது தாக்குதல் எதேச்சதிகாரத்தின் உச்சம்: சீமான்
த.வெ.க.,வினர் மீது தாக்குதல் எதேச்சதிகாரத்தின் உச்சம்: சீமான்
ADDED : மே 29, 2025 06:26 AM

சென்னை: 'த.வெ.க., பெண் பொறுப்பாளர்கள் மீது, போலீசார் தாக்குதல் நடத்தியிருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை வியாசர்பாடியில், தீ விபத்தில் குடிசைகளை இழந்த மக்களுக்கு, த.வெ.க., பொறுப்பாளர்கள் அத்தியாவசிய பொருட்களும், உணவும் வழங்கியதை, தமிழக காவல் துறை தடுத்ததோடு, பெண் நிர்வாகிகள் என்றும் பாராமல் கடுமையாக தாக்கியிருப்பது கண்டனத்துக்குரியது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்ன தேச குற்றமா? தி.மு.க., அரசு, காவல் துறையை ஏவி தாக்கியிருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தி.மு.க., அரசு செய்யத் தவறியதை, ஓர் அரசியல் இயக்கத்தினர் தாமாக முன்வந்து உதவினர் என்றால், அதை தட்டிக் கொடுத்து பாராட்ட வேண்டுமே தவிர, தடுத்து நிறுத்தி தாக்குவது கொடுஞ்செயல்.
பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உதவி செய்வதானால்கூட, எங்கள் பெயரை ஒட்டி, நாங்கள் மட்டும்தான் செய்ய வேண்டும். நாங்கள் செய்யும்வரை வேறு யாரும் உதவக்கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலை?
இதற்கு பெயர்தான், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் திராவிட மாடலா? இது தான், தி.மு.க., பெற்றுத் தந்த சமூக நீதியா?
தி.மு.க., அரசின் இத்தகைய அதிகார அட்டூழியங்கள் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர் என்பதை மறந்துவிட வேண்டாம். த.வெ.க., பெண் நிர்வாகிகளை தாக்கிய போலீசார் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.