மெரினா உட்பட 8 கடற்கரைகளுக்கு 'நீலக்கொடி' சான்று பெற முயற்சி
மெரினா உட்பட 8 கடற்கரைகளுக்கு 'நீலக்கொடி' சான்று பெற முயற்சி
ADDED : பிப் 20, 2024 01:32 AM
50 கோடி ரூபாயில் அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்பு நிதி உருவாக்கப்படும். இதற்கென முதல் கட்டமாக, 5 கோடி ரூபாயை அரசு வழங்கும். பிற அரசு நிறுவனங்கள், பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி, தேசிய சுற்றுச் சூழல் அமைப்புகள் உதவியுடன், அழிந்து வரும் நிலையில் உள்ள உயிரினங்களை பாதுகாக்க உரிய திட்டங்கள் வகுக்கப்படும்
தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் 1,076 கி.மீ., கடற்கரை பகுதியை மையமாகக் கொண்டு, கடலோர வளங்களை மீட்டு எடுப்பதற்காக 1,675 கோடி ரூபாயில், 'நெய்தல் மீட்பு இயக்கம்' என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுஉள்ளது.
இத்திட்டம் பல்லுயிர் பெருக்கம், கடற்கரை பாதுகாப்பு, கடற்கரையோர சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மாசு கட்டுப்பாடு ஆகிய நோக்கங்களை கொண்டது
40 கோடி ரூபாயில், எண்ணுார் கடற்கரை பகுதியை பாதுகாத்து மீட்டெடுப்பதற்கான பணி செயல்படுத்தப்படும்
சென்னை மெரினா, ராமநாதபுரம் அரியமான், துாத்துக்குடி காயல்பட்டினம், நெல்லை கோடாவிளை, நாகை காமேஸ்வரம், புதுக்கோட்டை கட்டுமாவடி, கடலுார் சில்வர் கடற்கரை, விழுப்புரம் மரக்காணம் ஆகிய இடங்களில் உள்ள முக்கிய கடற்கரைகளை தேர்ந்தெடுத்து, 250 கோடி ரூபாயில், மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதன் வாயிலாக, 'நீலக்கொடி கடற்கரை சான்று' பெற திட்டமிடப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை வசதிகளை அமைப்பதில் கடலோர சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை ஈடுபடுத்தவும், கைவிடப்பட்ட, பயனற்ற மீன்பிடி கருவிகளை அகற்றவும், பிளாஸ்டிக் கழிவுகளுக்கான சுழற்சி பொருளாதார தீர்வுகளை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

