ADDED : பிப் 18, 2024 06:10 AM

சேதுபாவாசத்திரம் : தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரத்தில், பாஸ்போர்ட் அதிகாரிகள், போலீசார் துணையுடன், இலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் வினியோகம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்படி, 'க்யூ பிராஞ்ச்' போலீசார் விசாரித்தனர்.
இந்த வழக்கில் ஆறு பேரை, 2023 டிச., 13ல் போலீசார் கைது செய்தனர். சங்கரன், 52, என்பவரை, ஜன., 31ல் கைது செய்தனர். முக்கிய நபரான சேதுபாவாசத்திரம் போலீஸ் ஸ்டேஷன் எழுத்தர் சேஷா, 47, சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்தார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை இது குறித்து கேள்வி எழுப்பியது. அவரை க்யூ பிராஞ்ச் போலீசார், நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், 50 பேர் போலியாக பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்துள்ளது. உடந்தையாக இருந்த பாஸ்போர்ட் அலுவலர்களிடம் விசாரிக்க க்யூ பிராஞ்ச் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.