பேரிடர் மேலாண்மைக்கு ரூ.300 கோடி ஒதுக்கவில்லை தணிக்கை அறிக்கையில் தகவல்
பேரிடர் மேலாண்மைக்கு ரூ.300 கோடி ஒதுக்கவில்லை தணிக்கை அறிக்கையில் தகவல்
ADDED : அக் 17, 2025 08:06 PM
சென்னை:'தமிழகத்தில், 2023 - 24ம் நிதியாண்டு பேரிடர் மேலாண்மை பணிகளுக்கான, 300 கோடி ரூபாய் நிதியை, அதற்கான துறைக்கு அரசு மாற்றவில்லை' என, கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின், 2023 - 24ம் நிதி ஆண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
மாநில பேரிடர் தணிப்பு நிதியை, பேரிடர் தணிப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில், 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீத நிதியை மாநில அரசும் அளிக்க வேண்டும். இவ்வாறு திரட்டப்படும் நிதியை, பேரிடர் மேலாண்மை துறைக்கு, மாநில அரசு ஒதுக்க வேண்டும்.
இந்நிலையில், 2023 - 24ம் நிதியாண்டில், 142.80 கோடி ரூபாயை தமிழக அரசு, 2022 - 23ம் நிதி ஆண்டின் இறுதி தவணையாக ஒதுக்கியது.
அதே நேரத்தில், 2023 - 24ம் நிதி ஆண்டில் மத்திய அரசின் பங்கு, 225 கோடி ரூபாய், மாநில அரசின் பங்கு, 75 கோடி ரூபாய் என, 300 கோடி ரூபாய் நிதியை சம்பந்தப்பட்ட துறை கணக்குக்கு அரசு ஒதுக்கவில்லை.
அதேநேரத்தில், 2023 - 24ம் நிதியாண்டில், ஏற்கனவே இருந்த நிதி அடிப்படையில், பேரிடர் மேலாண்மை பணிகளுக்கு, 414.80 கோடி ரூபாய் செலவானது. இதனால், பேரிடர் தணிப்பு நிதியில் மீதம் ஏதும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசம் என்பதால், வெளியூர் வாகனங்களுக்கு, 'பசுமை வரி' வருவாய் துறையால் வசூலிக்கப்படுகிறது. இரண்டு இடங்களில், 2017 டிசம்பர் முதல் இந்த வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரி, சுற்றுச்சூழல், சுற்றுலா துறைகளின் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
இந்த வகையில், 2024 நவம்பர் வரை, 8.38 கோடி ரூபாய் பசுமை வரியாக வசூலிக்கப்பட்டது. இதில், 2.91 கோடி ரூபாய் ஊதியம் மற்றும் திட்ட செலவுகள் மேற்கொள்ளப்பட்டன. மீதம், 5.47 கோடி ரூபாய் நிதி செலவிடப்படாமல் மாவட்ட கலெக்டரின் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பசுமை வரி என்பது, மாநில அரசின் எந்த சட்டம் மற்றும் விதிகளின் கீழும் வராததால், இதற்கு எவ்வித சட்ட அங்கீகாரமும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.