ADDED : மார் 01, 2024 12:56 AM

வானுார்:ஆரோவில் 56ம் ஆண்டு உதய நாளையொட்டி, அங்கு வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், 'போன் பயர்' ஏற்றி, கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இந்நகரை வடிவமைக்கும் பணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
உலகில் மனித குல ஒற்றுமை சின்னமாக, சர்வதேச நகரை உருவாக்க வேண்டும் என்ற கருத்து முதன் முறையாக தத்துவ ஞானி அரவிந்தர் எழுத்துக்களில் இருந்து தோன்றியது.
ஆரோவில் சர்வதேச நகர திட்டம் குறித்து 1996ல், 'யுனெஸ்கோ' பொது சபையில் இந்திய அரசால் வைக்கப்பட்டு, ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெருமுயற்சியால், 1968 பிப்ரவரி 28ம் தேதி ஆரோவில் சர்வதேச நகரம் துவங்கப்பட்டது. ஆரோவில் நகரின் 56வது உதய தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், மாத்திர் மந்திர் அருகே உள்ள ஆம்பி தியேட்டரில் நேற்று முன்தினம் அதிகாலை 5:15 மணிக்கு, 'போன் பயர்' எனப்படும் பெருந்தீ ஏற்றி, 6:15 மணி வரை கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
தியானத்தின்போது, ஆரோவில் சாசனம் அன்னையின் குரலால் ஒலிபரப்பப்பட்டது.

