மா.சு.வுடன் வாக்கிங் போக ஆஸ்திரேலிய துாதருக்கு ஆசை
மா.சு.வுடன் வாக்கிங் போக ஆஸ்திரேலிய துாதருக்கு ஆசை
ADDED : செப் 20, 2024 01:41 AM

சென்னை:“தடுப்பூசி, மார்பக புற்றுநோய் கண்டறிதல் உள்ளிட்டவற்றில், இரு நாட்டு மக்களும் பயனடையும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும்,” என, ஆஸ்திரேலியா துாதர் சிலாய் ஸாகி கூறினார்.
இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய துாதர் சிலாய் ஸாகி, சென்னை தலைமை செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியனை சந்தித்தார்.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
ஆஸ்திரேலியாவில், முதியோருக்கான மருத்துவ சேவைகள், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மருத்துவ திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தோம்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, இதயம் காப்போம், சிறுநீரக பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அவர்களிடம் கூறினோம்.
சென்னையில் உள்ள, 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கூறினார்.
ஆஸ்திரேலியா துாதர் சிலாய் ஸாகி கூறியதாவது:
இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. தடுப்பூசி, மார்பக புற்றுநோய் கண்டறிதல் போன்ற திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, இருநாட்டு மக்களும் பயனடையும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, தமிழக அமைச்சரை ஆஸ்திரேலியா வரும்படி அழைப்பு விடுத்துள்ளேன்.
இவ்வாறு கூறினார்.
இந்த சந்திப்பில், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், ஆஸ்திரேலிய துணை துாதர் டேவிட் எக்லெஸ்டன் ஆகியோர் பங்கேற்றனர்.