ADDED : நவ 28, 2024 06:17 AM
திருச்சி: திருச்சியில் ஏழு குளிர்பான நிறுவனங்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் அறிவுசார் சொத்து உரிமைகள் அமலாக்க பிரிவு போலீசார் இணைந்து, திருச்சி மாவட்டம் துரைக்குடி, கள்ளிக்குடி, திருமலை, மணிகண்டம், பீமநகர் உட்பட பகுதிகளில் செயல்படும், குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.
அவற்றில், ஏழு குளிர்பான நிறுவனங்களில் பிரபல குளிர்பானங்களின் பாட்டில்களில், தங்கள் நிறுவன ஸ்டிக்கரை ஒட்டி, முறைகேடாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிறுவனங்களில் இருந்து, பிரபல குளிர்பான நிறுவனங்களின், 15,620 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்நிறுவனங்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.
இது குறித்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில், ''பிரபல தனியார் நிறுவனங்களின் பாட்டில்களை, மற்ற குளிர்பான நிறுவனங்கள் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.