'பைக் டாக்சி'க்கு தடை கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் பேரணி
'பைக் டாக்சி'க்கு தடை கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் பேரணி
ADDED : டிச 20, 2024 12:45 AM

சென்னை:ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்; 'பைக் டாக்சி'களுக்கு தடை விதிக்க வேண்டும்; ஆட்டோ பயணியருக்காக புதிய செயலி துவங்க வேண்டும் என்பது உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் லேங்க்ஸ் தோட்டச்சாலையில் இருந்து கோட்டையை நோக்கி, ஆட்டோ ஓட்டுனர்கள் பேரணியாக புறப்பட்டனர்; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
கடந்த 2022ல், பைக் டாக்சி மற்றும் அதற்கான செயலிக்கு உயர் நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது. பின், ஆறு மாதத்தில் மேல்முறையீட்டு வழக்கில் செயலிக்கான தடை விலக்கப்பட்டது. ஆனால், பைக் டாக்சிக்கான தடை அப்படியே இருக்கிறது.
அண்மையில் வழக்கு விசாரணையின் போது கூட, பைக் டாக்சியில் பயணித்த, 189 பேருக்கு காப்பீட்டை பெற்றுத் தர முடியாததால், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் என, போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.
ஆனால், போக்குவரத்து துறை அமைச்சரோ, தடையில்லை என்கிறார். பைக் டாக்சியால் ஐந்து லட்சம் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. ஆட்டோ கட்டணம் நிர்ணயம் தொடர்பான கோப்பு, முதல்வரின் மேஜையில் இருப்பதாக கூறுகின்றனர். நான்கு ஆண்டுகளாக, ஒரு கோப்பு முதல்வரின் மேஜையில் இருக்குமா?
இதுகுறித்து 23ம் தேதி பேச்சு நடத்த, போக்குவரத்து ஆணையர் அழைத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.