ADDED : டிச 18, 2024 02:44 AM
சென்னை:தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு, 2013ம் ஆண்டு, 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது.
இரவு நேரத்தில், இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதித்து, போக்குவரத்துதுறை உத்தரவு பிறப்பித்தது.
இது அமலுக்கு வந்து, 11 ஆண்டுகளாகி விட்டது. இருப்பினும், அரசு அறிவித்தபடி, மின்னணு மீட்டரும் வழங்கவில்லை; எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய கமிட்டியும் அமைக்கவில்லை.
இந்நிலையில், புதிய கட்டணம் நிர்ணயிக்க கோரி, ஆட்டோ தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக, பிரத்யேக செயலி கொண்டு வர உள்ளோம். இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்களின் விபரங்களை சேகரித்துள்ளோம். புதிய கட்டண விபரத்தை, தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளோம். விரைவில், புதிய கட்டணத்தைஅரசு அறிவிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.