ADDED : பிப் 11, 2026 06:35 AM

சென்னை; 'ஆட்டோக்களுக்கு கட்டணம் உயர்த்த வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி, சுற்றுலா கேப் ஓட்டுநர்கள் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
இதன் ஒரு பகுதியாக, கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகம் முன், நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற, 700க்கும் மேற்பட்டோர், திடீரென கிண்டி பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை கைது செய்தனர். இப்போராட்டத்தால், அப் பகுதியில், 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து, தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்சி, சுற்றுலா கேப் ஓட்டுநர்கள் கூட்டமைப்பு தலைவர் ஜாஹிர் ஹூசைன் அளித்த பேட்டி:
தனியார் செயலிகளை முறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட, ஏழு அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்.
போக்குவரத்து ஆணையரிடம் பல முறை சந்தித்து பேசியும் தீர்வு காணப்படவில்லை. எனவே, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
