UPDATED : மார் 28, 2025 06:45 AM
ADDED : மார் 28, 2025 05:14 AM

சென்னை: ''தமிழகம் முழுதும் அனைத்து அரசு பஸ்களிலும், விரைவில் தானியங்கி கதவு அமைக்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - ஜெயகுமார்: ஈரோட்டில் இருந்து திருப்பூர் வழியாக பெருந்துறை செல்லும் பஸ்கள், இடையில் உள்ள விஜயமங்கலம் உள்ளிட்ட முக்கியமான ஊர்களுக்கு வராமல், மேம்பாலம் வழியாக செல்கின்றன.
இதனால், இந்த ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கடந்த பிப்ரவரி 6ல் கூட்டம் அதிகமாக இருந்ததால், தனியார் பஸ் கவிழ்ந்து, படிக்கட்டில் பயணித்த, பெருந்துறையைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இது போன்ற விபத்துகளை தவிர்க்க, அனைத்து பஸ்களிலும் தானியங்கி கதவு அமைக்க வேண்டும்.
அமைச்சர் சிவசங்கர்: அரசு பஸ்களுக்கு தானியங்கி கதவுகள் அமைக்கும் பணி, சென்னை மாநகரில் முடிந்துள்ளது. மற்ற பகுதிகளிலும் படிப்படியாக, அரசு பஸ்களுக்கு தானியங்கி கதவுகள் அமைக்கப்படும்.
பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.