மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அவசியம்: உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேச்சு
மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அவசியம்: உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேச்சு
ADDED : டிச 07, 2025 02:04 AM

சென்னை: ''சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளின் மாசு கட்டுப்பாட்டு வாரியங்களை வலுப்படுத்துவதுடன், அவற்றுக்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்க வேண்டும்,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று துவங்கிய, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மண்டல சுற்றுச்சூழல் மாநாட்டில், அவர் பேசியதாவது:
சுற்றுச்சூழல் மாசு என்பது, இப்போது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. மண், மலை, காற்று, மரம், ஆறுகள் என, இயற்கையை மனிதன் கடவுளாக வழிபடுகிறான். அந்த இயற்கையை மனிதனே தான் மாசுபடுத்துகிறான்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. இயற்கையின் விலைமதிப்பற்ற கூறுகளை மீண்டும் உருவாக்க, மிகப்பெரிய மனித முயற்சியும், பணமும் தேவைப்படும். சுற்றுச்சூழல் மாசுபடுவதால், காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை போன்ற சீரழிவுகள் ஏற்படுகின்றன.
இதனால், உலகம் பல்லாயிரம் கோடி ரூபாய்களை இழக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 10 சதவீதத்தை இழக்கிறோம். சுற்றுச்சூழல் மாசு என்பது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
சுற்றுச்சூழல் பிரச்னையை சமாளிக்க, நாட்டில் ஏராளமான சட்டங்கள் உள்ளன. ஆனால், அதை செயல்படுத்தும் அமைப்புகள் பலவீனமாக உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் மத்திய, மாநில அரசுகளின் மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், போதுமான ஊழியர்களுடன் வலுப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் பேசியதாவது:
மனிதன் பூமியின் எஜமானர் அல்ல என்பதை, ஒவ்வொருவரும் உணர வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடுவது, இயற்கையின் ஒழுங்கில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும்.
ஆரோக்கியமான சுற்றுச்சூழலுடன், கண்ணியத்துடன் வாழ்வது அடிப்படை உரிமை என, இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், மேம்படுத்துவதும், ஒரு சில இயற்கை ஆர்வலர்களின் பொறுப்பு அல்ல. அது, ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை, அரசியலமைப்பு சட்டம் நமக்கு நினைவூட்டுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா, தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாடு, இன்று நிறைவு பெறுகிறது.
'இன்று மட்டும்
தப்பித்து விட்டோம்'
உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசும்போது, ''தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் போது, கழிவு மேலாண்மை குறித்து நாம் சிந்திப்பதில்லை. நானும், இங்கே வந்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமாரும், இன்று மட்டும் டில்லி மாநகரின் காற்று மாசுபாட்டில் இருந்து தப்பித்து விட்டோம்,'' என்றார்.

