ADDED : டிச 04, 2025 05:30 AM

சென்னை: மத்திய - மாநில மற்றும் நிகர்நிலை பல்கலைகளுக்கு, தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கான புதிய விதிகளை, ஏ.ஐ.சி.டி.இ., அறிமுகம் செய்துள்ளது.
நாடு முழுதும் உள்ள இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகள், ஏ.ஐ.சி.டி.இ., எனும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன.
பல்கலைகளுக்கு அங்கீகாரம் வழங்குவது, மாணவர் சேர்க்கை நடத்துவது உட்பட, பல்வேறு கல்வி சார்ந்த செயல்பாடுகள், ஏ.ஐ.சி.டி.இ., விதிகளின்படி மேற்கொள்ளப் படுகின்றன.
அந்த வகையில், மத்திய - மாநில பல்கலை, தனியார் நிகர்நிலை பல்கலைகள், தன்னாட்சி அதிகாரம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை, ஏ.ஐ.சி.டி.இ., வகுத்துள்ளது.
அதன்படி, பல்கலைகள் தன்னாட்சி அதிகாரம் பெற, என்.ஐ.ஆர்.எப்., எனும் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசையில், சிறந்த இடங்களை பிடித்திருக்க வேண்டும் .
இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில், குறைந்தபட்சம் 60 சதவீதம் தேர்ச்சி, என்.ஏ.ஏ.சி., எனும் 'நாக்' தர வரிசையில், 4க்கு 3.26 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என, மூன்று விதிகள் கொ ண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், தன்னாட்சி கேட்கும் கல்வி நிறுவனங்கள், மத்திய - மாநில விசாரணை அமைப்புகளின் விசாரணையில் இருக்கக் கூடாது என, ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்துள்ளது.

