ADDED : ஜூலை 17, 2025 03:27 AM

சென்னை: காமராஜர் குறித்து தி.மு.க., - எம்.பி., சிவா தவறான தகவலை அளித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என, த.மா.கா., தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த தலைவர் காமராஜர். தமிழகத்தின் வளர்ச்சிக்கு அன்றே அடித்தளம் இட்டவர். தேசிய தலைவராக மதிக்கப்பட்டவர்.
நேர்மை, எளிமை, துாய்மை போன்றவற்றை இறுதி வரை கடைபிடித்தவர். வருங்கால சந்ததியினருக்கு ரோல் மாடலாக திகழ்பவர். அவரைப் பற்றி தவறான தகவல்கள் வெளிவரக் கூடாது.
காமராஜர் குறித்து, தி.மு.க., - எம்.பி., சிவா, தவறான தகவலை அளித்திருப்பது வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மாற்று கட்சியினர் கூட இதை ஏற்க மாட்டார்கள்.
மறைந்தும் மறையாமல் இன்றும் தமிழக மக்களிடம் வாழ்ந்து கொண்டிருக்கும் 'ரோல் மாடல்' தலைவர் குறித்து தவறான தகவல்களை தெரிவிக்க வேண்டாம். இவ்வாறு வாசன் கூறினார்.

