பிளஸ் 2 படித்தவர்களுக்கு விமான போக்குவரத்து பயிற்சி
பிளஸ் 2 படித்தவர்களுக்கு விமான போக்குவரத்து பயிற்சி
ADDED : டிச 28, 2024 03:18 AM
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, தாட்கோ சார்பில், விமான நிலையங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, தாட்கோ இயக்குநர் கந்தசாமி வெளியிட்ட அறிக்கை:
'தாட்கோ' எனப்படும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட, விமான நிறுவனங்கள் உதவியுடன், விமான நிலைய பயணியர் சேவை, கார்கோ பிரிவில் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி; விமான டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்கு, பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற, 18 முதல் 23 வயது நிரம்பிய, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலம் ஆறு மாதங்கள். மாணவர்கள் விடுதியில் தங்கி பயிற்சி பெற, 95,000 ரூபாய், தாட்கோ வாயிலாக வழங்கப்படும். மேலும், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 2' மற்றும் 'குரூப் 2ஏ' தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களை www.tahdco.com என்ற இணையதளத்தில் அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.