டில்லி 'பாரத் டெக்ஸ்' கண்காட்சியில் 4 திருப்பூர் நிறுவனங்களுக்கு விருது
டில்லி 'பாரத் டெக்ஸ்' கண்காட்சியில் 4 திருப்பூர் நிறுவனங்களுக்கு விருது
ADDED : பிப் 18, 2025 11:55 PM

திருப்பூர்:'வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி' கோட்பாட்டை சிறப்பாக செயல்படுத்தி வரும், திருப்பூரை சேர்ந்த நான்கு நிறுவனங்களுக்கு, இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது.
புதுடில்லியில் நடந்த 'பாரத் டெக்ஸ்' கண்காட்சியில், ஜவுளித்துறை சார்ந்தோர் தங்கள் தனித்துவத்தை, தயாரிப்புகள் வாயிலாக காட்சிப்படுத்தியிருந்தனர். இதில், சிறப்பான தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்திய நிறுவனங்களுக்கு, 'டெக்ஸ்டைல் சஸ்டெய்னபிளிட்டி' எனும் ஜவுளி நிலைத்தன்மை விருது வழங்கி, இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு கவுரவித்துள்ளது.
வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி என்ற கோட்பாட்டை செயல்படுத்தி வரும், திருப்பூரை சேர்ந்த நான்கு நிறுவனங்களுக்கு, விருதுகள் கிடைத்தன. புதுமையான நீர் மேலாண்மை மற்றும் பயன்பாட்டுக்கான முதன்மை விருதை, 'ஜெய் விஷ்ணு கிளாத்திங்' பெற்றது.
நீடித்த நிலையான உற்பத்தி சாதனைக்காக, 'ஈஸ்ட்மேன்' நிறுவனம்; குறைவான கார்பன் உமிழ்வுக்காக, 'சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ்'; புதுமையான நீர்மேலாண்மை மற்றும் பயன்பாட்டில், 'எஸ்.சி.எம்., கார்மென்ட்ஸ் நிறுவனமும் விருது பெற்றுள்ளன.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,''நாடு முழுதும் இருந்து, 70 கிளஸ்டர்களை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றன. இருப்பினும், உலக அளவிலான, சூழலியல் மற்றும் சமூக பொறுப்புடன் செயல்படுவதில், திருப்பூர் முன்னிலையில் உள்ளதாக பாராட்டியுள்ளனர். பிரதமர் மோடியும், திருப்பூர் நிறுவனங்களை பாராட்டினார்.
''ஐரோப்பிய நாடுகள், கட்டாயமாக்க உள்ள, சூழலியல் மற்றும் சமூக பொறுப்பு சட்ட விதிமுறைகளை எதிர்கொள்ள, திருப்பூர் முழு அளவில் தயாராக உள்ளது,'' என்றார்.