வேளாண் பல்கலை மாணவர்களுக்கு விருது: தமிழக கவர்னர் ரவி அறிவிப்பு
வேளாண் பல்கலை மாணவர்களுக்கு விருது: தமிழக கவர்னர் ரவி அறிவிப்பு
UPDATED : ஜூன் 08, 2025 03:35 PM
ADDED : ஜூன் 08, 2025 04:36 AM

சென்னை,: சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த, உலக சுற்றுச்சூழல் தின விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
நாட்டில் சுற்றுச்சூழல் மாறி வருவதற்கு மனிதர்களே காரணம். ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டுச் செல்லும்போது, நாம் மிகவும் ஏழையாக இருந்தோம். அவர்கள் நம்மை ஆட்சி செய்வதற்கு முன் வரை, உணவுப்பஞ்சம் என்பது கிடையாது. கடந்த, 1800ம் ஆண்டு கால கட்டத்தில், தமிழகத்தில் உணவு உற்பத்தி சிறப்பாக இருந்தது; காவிரி டெல்டாவில், 200 ஆண்டுகளுக்கு முன்னரே, 2.47 ஏக்கருக்கு, 6,000 டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த இலக்கை, ஜப்பான் நாடு இன்னும் எட்ட முடியவில்லை.
ஆங்கிலேயர்கள் காலத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டது, அதிக வரி விதித்ததால், விவசாயிகள் திணறினர். பயிர்கள் வளர்க்கும் இடங்களை நாசமாக்கி, போதைப்பொருளை உற்பத்தி செய்து, உலக நாடுகளுக்கு அனுப்பினர். இன்றும் நாம் உணவுச்சத்து பற்றாக்குறை உள்ளவர்களாக இருக்கிறோம். அதிலிருந்து மீண்டுவர, பல முயற்சிகள் எடுக்க வேண்டும்.
இந்தியாவில் நடந்த பசுமை புரட்சி, மிகப்பெரிய மாற்றத்தை விவசாயத்தில் ஏற்படுத்தியது. ரசாயனம் கலந்த உரங்களை தவிர்த்து, இயற்கை முறைக்கு மாறத் துவங்கினர். இதனால், உணவு உற்பத்தியும் நாடு முழுதும் நன்றாக வளர்ந்தது. நம் விவசாயிகளால், இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுகள் நமக்கு மட்டுமின்றி, மற்ற நாடுகளின் பசியையும் போக்குகின்றன. விவசாயிகளை நாம் மறந்து விடக்கூடாது. நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தேன், உயர்கல்வி பயிலும்போது விவசாயம் செய்துள்ளேன்.
இயற்கை முறைக்கு எல்லாரும் மாற வேண்டும். நம்மாழ்வார் விவசாயி மட்டுமல்ல, அவர் ஒரு விவசாய விஞ்ஞானி. தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இயற்கை வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு தங்கப்பதக்கத்துடன் கூடிய விருது, நடப்பாண்டு முதல் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினர்.