அயோத்திக்கு பைக் யாத்திரை தடை விதித்தது தமிழக போலீஸ்
அயோத்திக்கு பைக் யாத்திரை தடை விதித்தது தமிழக போலீஸ்
UPDATED : ஜன 15, 2024 03:33 AM
ADDED : ஜன 15, 2024 02:22 AM

கோவை: உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, சாலை மார்க்கமாக கோவையிலிருந்து பைக் யாத்திரை மேற்கொள்ள, கோவை மாவட்ட பா.ஜ., விருந்தோம்பல் பிரிவு துணைத் தலைவர் இந்துஷா காஞ்சி நேற்று திட்டமிட்டிருந்தார்.
அவரை வழியனுப்பி வைக்க, கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி உத்தமராமசாமி உள்ளிட்ட பா.ஜ., பிரமுகர்கள் நேற்று காலை, ராம் நகரிலுள்ள கோதண்டராமர் கோவிலுக்கு வருகை தந்தனர்.
அங்கு சிறப்பு வழிபாடுகளை நிறைவு செய்த இந்துஷா காஞ்சிக்கு, கோதண்டராமர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பா.ஜ., பிரமுகர்கள் வெற்றித் திலகமிட்டு, 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து, போலீஸ் உதவி கமிஷனர் கணேஷ் தலைமையில், ஏராளமான போலீசார் கோதண்டராமர் கோவில் முன்பாக திரண்டனர். 'பைக்கில் யாத்திரை செல்ல அனுமதி இல்லை; மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்' என்று எச்சரித்தனர்.
இதையடுத்து, பா.ஜ.,வினர் போலீஸ் அனுமதி வேண்டி கடிதம் கொடுத்தனர்.
பா.ஜ., மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் கூறுகையில், ''தமிழகத்தில் தனிநபர் ஆன்மிக யாத்திரை செல்வதற்கு கூட போலீசிடம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஹிந்துக்களின் 500 ஆண்டு கனவு, ராமர் கோவில். அது தற்போது நிறைவேறி உள்ளது.
''அதற்கான வேண்டுதல் தான் பைக் யாத்திரை. அதை நிறைவேற்ற பக்தர் ஒருவர் செல்கிறார். அனுமதி என்ற பெயரில், பக்தி விஷயத்தில் அரசியலை கலக்கின்றனர்.
''சட்டத்தை மதிக்கிறோம். அதனால் யாத்திரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும், யாத்திரை நடக்கும்” என்றார்.