கோவில்களில் நேரலைக்கு அனுமதி வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவு
கோவில்களில் நேரலைக்கு அனுமதி வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவு
UPDATED : ஜன 22, 2024 11:01 AM
ADDED : ஜன 22, 2024 10:34 AM

புதுடில்லி: ராமர் கோவில் திறப்பை தனியார் கோவில்கள், மடங்கள், திருமண மண்டபங்களில் நேரலை செய்ய போலீசார் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில், 'கோவில்களில் நேரலைக்கு அனுமதி வழங்க வேண்டும்' என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
உ.பி., மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள கோவிலில் பிராண பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு நடக்கிறது. கர்ப்ப கிரகத்தில் பால ராமர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் கண்களை மூடியுள்ள திரை அகற்றப்பட்டு, விக்ரஹம் உயிர்ப்பு பெறும் உச்சகட்ட சம்பிரதாயம் இது. இதனை பல இடங்களில் நேரலையாக ஒளிபரப்ப கோவில் நிர்வாகம், பா.ஜ., கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
ஆனால், தமிழக அரசும், போலீசாரும், ராமர் கோவில் திறப்பை நேரலை செய்யவோ, கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை செய்யவோ அனுமதி மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனியார் மண்டபத்தில் பஜனைகள் மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், 'ராமர் கோவில் திறப்பை தனியார் கோவில்கள், மடங்கள், திருமண மண்டபங்களில் நேரலை செய்ய போலீசார் அனுமதி தேவையில்லை. தனியார் கோவில்களில் நேரலை செய்யவோ, பூஜைகள் செய்யவோ கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதியளிக்க வேண்டும். கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளலாம்' என உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றத்தில் பா.ஜ., சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள், ''தமிழக கோவில்களில் நேரலை செய்ய சட்டப்படி அனுமதி அளிக்கவேண்டும். சட்டப்படி எதற்கு அனுமதி வழங்கலாமோ, அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். வாய்மொழி உத்தரவை ஏற்று போலீசார் செயல்படக்கூடாது'' எனக் கூறி வழக்கு குறித்து தமிழக அரசு ஜன.,29க்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.