ஆயுஷ் ஊழியர்கள் கொத்தடிமைகளா? தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆயுஷ் ஊழியர்கள் கொத்தடிமைகளா? தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 26, 2024 07:04 AM

சென்னை : அரசு மருத்துவமனைகளில் உதவி பணி தொழிளார்கள், ஆயுஷ் பணியாளர்களை, கொத்தடிமைகளாக நடத்துவதை கைவிடக்கோரி, பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம், பொது சுகாதாரத்துறை ஆயுஷ் பணியாளர்கள் சங்கம், அரசு மருத்துவமனை உதவி பணி தொழிலாளர்கள் சங்கம், அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம், எல்.பி.ஜி., சிலிண்டர் டெலிவரி செய்வோர் சங்கம் ஆகியவை இணைந்து, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க செயலர் ராஜேந்திரன் கூறியதாவது:
மூன்று ஆண்டுகளாக, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்குவதுடன், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். மாவட்ட நலவாழ்வு சங்கத்தின்கீழ் பணியாற்றும் செவிலியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.
மருத்துவமனை உதவி பணி தொழிலாளர்கள் மற்றும் ஆயுஷ் பணியாளர்களை கொத்தடிமையாக நடத்துவதை கைவிட வேண்டும்.
காஸ் டெலிவரி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக, 12,000 ரூபாய் வழங்க வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அரசு நல்ல தீர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.