ரயிலில் கண்டெடுத்த பெண் குழந்தையை வளர்ப்பு தாயிடம் ஒப்படைக்க முடியாது: ஐகோர்ட்
ரயிலில் கண்டெடுத்த பெண் குழந்தையை வளர்ப்பு தாயிடம் ஒப்படைக்க முடியாது: ஐகோர்ட்
ADDED : டிச 27, 2024 01:46 AM
சென்னை:ரயிலில் கண்டெடுத்த குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி வளர்ப்பு தாய் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருநெல்வேலியில் இருந்து ஈரோட்டுக்கு, ரவி என்பவர் தன் மனைவி சாவித்ரியுடன் கடந்த ஆண்டு பிப்ரவரி 20ல் ரயிலில் வந்தார்.
விசாரணை
ரயில் கழிப்பறையில், அப்போது தான் பிறந்த பெண் குழந்தை ஒன்றை, துணியால் சுற்றப்பட்டிருந்த நிலையில் கண்டெடுத்தனர். இந்த தம்பதிக்கு 20 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், அந்த பெண் குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் சென்று, பெயர் சூட்டி வளர்த்தனர்.
ஈரோட்டில் குழந்தை கடத்தல் நடப்பதாக, முதல்வரின் தனிப்பிரிவுக்கு வந்த செய்தி அடிப்படையில், குழந்தை நலக்குழு சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.
தம்பதி, ஒன்றரை ஆண்டுகளாக குழந்தையை வளர்த்து வருவதற்கான மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
அவர்கள் வசம் குழந்தை இருப்பது சட்டவிரோதம் என முடிவெடுத்து, குழந்தை நலக்குழு எடுத்துச் சென்றது.
இதையடுத்து, ஒன்றரை வயது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கும்படி, உயர் நீதிமன்றத்தில் சாவித்ரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, “ஒன்றரை ஆண்டுகளாக குழந்தையை வளர்த்து வருகின்றனர். உணர்வுப்பூர்வமாக குழந்தையுடன் ஒன்றி உள்ளனர். சுவீகாரம் எடுப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர்,” என்றார்.
உரிமை
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ரயில் கழிப்பறையில் இருந்து கண்டெடுத்த குழந்தை பற்றி, மனுதாரர் தகவல் தெரிவிக்கவில்லை. குழந்தையை வளர்ப்பது என, அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர்.
குழந்தை உடன் உணர்வுப்பூர்வமாக ஒன்றி உள்ளனர் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. அதற்காக மட்டுமே, குழந்தையை சுவீகாரம் எடுப்பதற்கு உரிமை வந்து விடாது.
தற்போது குழந்தை, அரசின் பாதுகாப்பில் உள்ளது; சட்டவிரோத காவலில் இல்லை. அதேநேரத்தில், மனுதாரர் வசம் குழந்தை இருந்ததை, சட்டப்பூர்வமானது என கருத முடியாது. ஏனென்றால், உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.
சுவீகாரம் எடுப்பதற்கு விண்ணப்பித்திருப்பதால் மட்டும், குழந்தையை தன்னிச்சையாக தங்கள் வசம் எடுக்கும் உரிமை வந்து விடாது.
சுவீகாரம் கோரும் பெற்றோரின் குடும்ப நிலவரம், மனநிலை, சூழ்நிலையை கண்டிப்புடன் குழு பரிசீலிக்க வேண்டும்.
போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், ஓடும் ரயிலில் இருந்து குழந்தையை கண்டெடுத்த உடன், உரிய அதிகாரிக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்றும், குழந்தையின் உண்மையான பெற்றோரை தேடி வருவதாகவும் கூறினார்.
குழந்தைக்கு தற்போது ஒன்றரை வயது. அந்தக் குழந்தையால் தன் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது.
அப்படி இருக்கும்போது, எந்த நடைமுறையையும் பின்பற்றாமல், வளர்ப்பு பெற்றோராக மனுதாரரை அறிவிப்பது உகந்ததாக இருக்காது.
தள்ளுபடி
சுவீகாரம் கேட்டு மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை, உரிய நடைமுறையை பின்பற்றி பரிசீலிக்க வேண்டும். எனவே, சட்டவிரோத காவலில் குழந்தை இல்லாததால், இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல; மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
குழந்தையின் உண்மையான பெற்றோரை கண்டு பிடிக்க, அரசு தரப்பில் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதன்பின், சுவீகாரம் அளிப்பது குறித்து, சட்டப்படி அரசு பரிசீலிக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.