ADDED : அக் 26, 2024 05:54 AM
சென்னை : புத்தாக்க திட்ட வழிகாட்டி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஒரு நாள் பயிற்சியை, இம்மாதத்துக்குள் முடிக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
பள்ளி மாணவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்தி, சமூகத்துக்கு தேவையான கண்டுபிடிப்புகளுக்கு அவர்களை பழக்கும் வகையில், புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதுகுறித்து மாணவர்களுக்கு விளக்கவும், அவர்களது கண்டு பிடிக்கும் ஆர்வத்தை துாண்டவும், ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியருக்கு ஒரு நாள் புத்தாக்க வழிகாட்டி பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், யுனிசெப் நிறுவனம், பள்ளி கல்வித்துறை ஆகியவை இணைந்து வழங்குகின்றன.
தற்போது, 3.0 என்ற பெயரில் நடக்கும் இப்பயிற்சியை, வரும் 30ம் தேதிக்குள் முடிக்க, பயிற்றுனர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர்.