ADDED : ஜன 10, 2025 11:46 PM
சென்னை:விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில், கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்ட, மூன்று பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் லியா லட்சுமி, 4, அப்பகுதியில் உள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், எல்.கே.ஜி., படித்து வந்தார்.
கடந்த, 3ம் தேதி, பள்ளியில் உணவு இடைவேளையில், அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் சிறுமி லியா லட்சுமி விழுந்து உயிரிழந்தார்.
சந்தேக மரணம், பணியில் கவனக்குறைவு உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ், விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், மூன்று பேரும் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கில் தொடர்புடைய மூன்று பேருக்கும் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மூவரும் சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்து, மயிலாப்பூர் போலீசில் கையெழுத்திட வேண்டும். சிறுமி குடும்பத்துக்கு, 5 லட்சம் ரூபாயை, பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் வழங்க வேண்டும் என, நிபந்தனைகள் விதித்தார்.

