ADDED : ஆக 22, 2025 02:29 AM
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு தடை விதித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.
கடந்த 2022, ஜூலை 11ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியும், திண்டுக்கலைச் சேர்ந்த சூரியமூர்த்தி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி, பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை நான்காவது உதவி சிட்டி சிவில் நீதிமன்றம், கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலாஜி, சிவில் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததுடன், சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், சூரியமூர்த்தி தரப்பில் 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதி பி.பி.பாலாஜி முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சூரியமூர்த்தி தரப்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி, ''கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதை மறைத்து, தடை உத்தரவு பெறப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தி உள்ளனர்,'' என்றார்.
அப்போது, பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''சூரியமூர்த்தி கட்சி உறுப்பினர் அல்ல. இந்த வழக்கை தாக்கல் செய்ய, அவருக்கு உரிமை இல்லை,'' என்றார்.
இதையடுத்து நீதிபதி, பழனிசாமிக்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும், வழக்கை நிராகரிக்க மறுத்த உத்தரவுக்கும் விதித்த இடைக்கால தடை உத்தரவை திரும்ப பெற்றார்; விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.