அரசு திட்டங்களில் முதல்வரின் பெயர் பயன்படுத்த தடை!
அரசு திட்டங்களில் முதல்வரின் பெயர் பயன்படுத்த தடை!
UPDATED : ஆக 01, 2025 11:58 PM
ADDED : ஆக 01, 2025 11:47 PM

சென்னை, ஆக. 2-- தமிழக அரசு துவங்க உள்ள புதிய திட்டங்கள் மற்றும் அமலில் உள்ள பழைய திட்டங்கள் தொடர்பான விளம்பரங்களில், முதல்வரின் புகைப்படம் இடம் பெற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது பெயரை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு துவங்கும் திட்டங்களில், முன்னாள் முதல்வர் படத்தையோ, ஆளுங்கட்சியின் கொள்கை, சித்தாந்த தலைவர்களின் புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. தமிழக மக்களுக்கு, அரசு சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டம், கடந்த மாதம் 15ம் தேதி துவக்கப்பட்டது.
இதில், நகர்ப்புறங்களில் 13 துறைகளைச் சேர்ந்த, 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த, 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்துக்கு, 54.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் பற்றிய விளம்பரம் உள்ளிட்டவற்றில், 'ஸ்டாலின்' என்ற பெயரை, தமிழக அரசு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
மேலும், தேர்தல் கமிஷனின் சட்டப்பூர்வ வழிமுறைகள், அறிவுறுத்தல்களை பின்பற்ற தவறியதற்காக, தி.மு.க., மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.
இதேபோல, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்த விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இனியன் என்பவரும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், அரசு விளம்பரங்களில் முதல்வரின் புகைப்படத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், கட்சியின் கொள்கை, சித்தாந்த தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதல்வர் புகைப்படத்தையோ பயன்படுத்துவது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.
அரசு திட்டங்களுக்கு, வாழும் அரசியல் தலைவர்களின் பெயர்கள் வைப்பதையும் அனுமதிக்க முடியாது. அதேபோல, ஆளும் கட்சியின் பெயர், கொடி, சின்னத்தையும், அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதும், உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் கமிஷனின் உத்தரவுகளுக்கு விரோதமானது.
தமிழக அரசு புதிதாக துவங்க உள்ள, ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில், அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வர் படத்தையோ, கட்சியின் கொள்கை, சிந்தாந்த தலைவர்களின் புகைப்படத்தையோ, தி.மு.க.,வின் கொடி, சின்னம் போன்றவற்றையோ பயன்படுத்தக் கூடாது.
அதேநேரத்தில், அரசு நலத் திட்டம் தொடங்குவதற்கோ அல்லது செயல்படுத்துவதற்கோ எதிராக, இந்த நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
அத்துடன், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், முதல்வர் பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., அளித்த புகாரை, தேர்தல் கமிஷன் விசாரிக்க, இந்த வழக்கு தடையாக இருக்காது. வழக்கு விசாரணை வரும், 13ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.