'பேட் கேர்ள்' படத்திற்கு தடை விதியுங்க! பிராமணர் சங்கம் வலியுறுத்தல்
'பேட் கேர்ள்' படத்திற்கு தடை விதியுங்க! பிராமணர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜன 31, 2025 12:40 AM
சென்னை:பேட் கேர்ள் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் தலைவர் நாராயணன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
பேட் கேர்ள் படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. இதில், பிராமணர் சமுதாயத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இளம் தலைமுறை பெண்களை, மிகவும் கேவலமாக சித்தரித்திருப்பது வேதனை அளிக்கிறது.
பட தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர், மிகப்பெரிய நிலை தடுமாற்றத்திற்கு ஆளாகி, இளம் தலைமுறையினரை பெரும் கலாசார சீரழிவை நோக்கி எடுத்துச்செல்ல முற்பட்டுள்ளனர்.
இப்படத்தில் காட்டி உள்ள, இளம்தலைமுறையின் தவறான வாழ்க்கை முறையை, ஏதோ பெண்ணுரிமை போல காட்டியுள்ள, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினருக்கு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இப்படத்திற்கு, 'ஏ' சான்றிதழுடன் சென்சார் போர்டு அனுமதி வழங்கி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. மத்திய அரசின் மேற்பார்வையில் இயங்கும், 'சென்சார் போர்டு' அனுமதியை, மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை பெரும் சர்ச்சையாகி உள்ள இந்த தருணத்தில், பேட் கேர்ள் படத்திற்கு, தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

